×

தோல்வி பயத்தில் மோடி மேடையில் கண்ணீர் சிந்துவார்: ராகுல் காந்தி கடும் தாக்கு

பெங்களூரு: தோல்வி பயத்தில் உள்ள மோடி மேடையில் கண்ணீர் சிந்தக்கூட செய்வார் என்றும் ராகுல் காந்தி விஜயபுரா பிரசாரத்தில் பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ‘ பிரதமர் மோடியின் பேச்சுகளை கேட்டிருப்பீர்கள். அவர் தோல்வி ஏற்படும் என்று பயந்துவிட்டார். தோல்வி பயத்தில் இருக்கும் பிரதமர் மோடி, மேடையிலேயே அழுது கண்ணீர் சிந்துவார். மக்கள் கவனத்தை திசைதிருப்ப மோடி முயற்சிக்கிறார். சில சமயம் சீனா, பாகிஸ்தானை பற்றி பேசுவார். திடீரென தட்டுகளை தட்ட சொல்வார் அல்லது மொபைலில் டார்ச்லைட் அடிக்க சொல்வார். ஆனால் நாட்டின் முக்கியமான பிரச்னைகளை கண்டுகொள்ளமாட்டார்.

ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என்று நாட்டில் முக்கியமான பிரச்னைகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். மோடி மக்கள் பணத்தை கொள்ளையடிக்க மட்டுமே செய்வார். மோடி சில கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளார். நாட்டின் 70 கோடி மக்களின் சொத்து மதிப்புக்கு நிகராக வெறும் 22 பேர் சொத்து வைத்துள்ளனர். ஒரு சதவீதத்தினர், 40 சதவீத மக்களின் சொத்துகளை கட்டுப்படுத்துகின்றனர். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மோடி ஆட்சியில் எந்த சலுகையும் இல்லை. மோடி கோடீஸ்வரர்களுக்கு சொத்து சேர்த்து கொடுத்தார். அந்த பணத்தை நாட்டின் ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இந்த தேர்தல் இதற்கு முன் நடந்த தேர்தல்களை போல் இல்லை. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கட்சியும் (பாஜ), ஒரு நபரும் (மோடி) இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் அழிப்பதற்காக ஜெயிக்க நினைக்கும் தேர்தல் இது. எனவே இது மிக முக்கியமான தேர்தல்’ என்றார்.

The post தோல்வி பயத்தில் மோடி மேடையில் கண்ணீர் சிந்துவார்: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,Bengaluru ,Vijayapura ,Congress ,President ,Vijayapura, Karnataka ,Dinakaran ,
× RELATED மோடியின் பொய் பிரச்சாரத்தை இளைஞர்கள்...